ஒருநாள் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் காசர்கோட்டுக்கு அருகே உள்ள கும்பளா என்ற ஊருக்குச் சென்றேன். காலையின் முதல் ரயிலில் விழுவதற்காக ரயில்பாதையோரமாக சென்றுகொண்டிருந்தேன். அந்தத் தருணத்தை நான் என் உக்கிரமான இலக்கியப்படைப்பு ஒன்றிலேயே மீண்டும் சொல்லில் நிகழ்த்திக்காட்ட முடியும். விடிகாலையின் பேரழகில் தற்செயலாக , அல்லது மிக இயல்பாக ஈடுபட்டேன் என்று சொல்லவேண்டும். காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.
இச்சொற்களை இன்று சொல்கிறேன். அப்போது அந்த தரிசனத்தின் அனுபவம் மட்டுமே இருந்தது. சொற்களில்லாமலிருப்பதே உண்மையான பேரனுபவம். இனி என் வாழ்க்கையில் துயரம் இல்லை என அப்போது முடிவெடுத்தேன்.
அன்றிலிருந்து இன்று வரை இருபத்திரண்டு வருடங்கள் தாண்டிச்சென்றுவிட்டிருக்கின்றன. நான் உண்மையில் வாழ்ந்தேனா என்றறிய விடாது நாட்குறிப்புகள் எழுதி வருகிறேன். நான் சோர்ந்திருந்த நாட்கள் மிக அபூர்வம். நம்பிக்கையிழந்த கணங்களே இல்லை. துயரமடைந்த பொழுதுகள் மிகமிகச்சில. அவற்றை உடனே என் எழுத்தின் கலை மூலம் உவகையாக ஆக்கிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் இயற்கையுடனான உறவைக் கொண்டாடுகிறேன். ஒவ்வொரு கணமும் என் உள்ளப்படியே வாழ்கிறேன்
மறக்க கூடாத , நினைவில் இருந்தால் வாழ்க்கையை சுலபமாகும் வாசகங்கள் . சொன்னவர் ஜெயமோகன் .